போதை பொருள் கடத்தல் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் டில்லியில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகிறார்கள். அந்த விசாரணையில் 5வதாக கைது செய்யப்பட்டவர் சதானந்தன். இவர் திருச்சியை சேர்ந்தவர். சென்னையில் கைதான இவர் தான் உணவு பொருட்களுடன் போதை பொருட்களை மறைத்து கடத்த உதவியாக இருந்தாராம்.
தற்போது சதானந்தனிடமும் என்சிபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக என்சிபி அதிகாரிகள் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். நேற்று தீரன் நகர், பிராட்டியூர் பகுதிகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் இன்று திருச்சி அரியமங்கலத்தில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த குடோனில் தான் உணவுப்பொருளுடன் போதை பொருளை கலந்து பொட்டலம் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. கொரியர் நிறுவனத்தில் சோதனை நடப்பதாக கூறப்பட்டது. அதுபற்றி விசாரித்தபோது அதுவும் தவறான தகவல் என்பது தெரியவந்தது. இதுபற்றி உள்ளூர் போலீசாரிடம் விசாரித்தபோது அதுபற்றி தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று கூறினர்.