சென்னை செங்குன்றத்தில்நடந்த நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு, நிருபர்களிடம் கூறும்போது , “இன்றைக்கு தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?” எனப் பேசினார். குஷ்புவின் இந்த பேச்சுகு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் இந்த உதவித்தொகை பெற்று வருகிறார்கள். இவர்கள்அனைவரும் பிச்சை எடுக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் குஷ்பு பேசி உள்ளார். அவர் இந்த பேச்சை வாபஸ் பெற வேண்டும் என மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் குஷ்பு நான் வாபஸ் பெறமாட்டேன் என கூறி விட்டார். இதனால் அவருக்கு தமிழ்நாடு முழுவதும் பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
குஷ்புவின் இந்த பேச்சு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மூத்த நடிகை அம்பிகா, “யாராக இருந்தாலும்.. எந்த கட்சியாக இருந்தாலும் சரி… ஏதாவது ஒரு உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ.. ஏற்றுக்கொண்டு பாராட்ட வேண்டும். அப்படி பாராட்ட முடியாவிட்டால் எதுவும் பேசக் கூடாது. இழிவான வார்த்தைகளையும் பயன்படுத்தகூடாது. எதற்காக பிச்சை என்ற வார்த்தையை சொல்லணும். 5 ரூபாய் கூட அவர்களுக்கு உதவும்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.