2009ம் ஆண்டு வாங்கிய இடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் இடம் வாங்கிய பொதுமக்கள் நவல்பட்டு காவல் நிலையத்தில் இடத்தை மீட்டு தர கோரி மனு அளித்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலூர் ஊராட்சிக்குட்பட்ட எலந்தபட்டி கிராமத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு பொன்மலை பட்டியை சேர்ந்த ரெக்ஸ் என்பவர் 3.15 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தில் நியூ சிட்டி என்ற பெயரில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வந்துள்ளார்
இந்நிலையில் இதை அறிந்த சென்னை, திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, சேலம், திருச்சி ,உட்பட பகுதிகளைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மக்கள் வீட்டுமனையை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் அவ்வாறு அப்பகுதியில் வீட்டுமனை வாங்கி உள்ளவர்கள் அவரது வீட்டு மனைகளில் போர் அமைத்தும் இரும்புவேலிகள் அமைத்தும் தங்களது இடத்தை பாதுகாத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் பொதுமக்கள் வாங்கியுள்ள நியூ சிட்டிக்குள் புகுந்து அவர்கள் அமைத்துள்ள கம்பி வேலிகளை உடைத்து மட்டுமல்லாமல் அவர்கள் பராமரித்து வந்த மரங்கள் மற்றும் போர் ஆகியவற்றை அப்புறப்படுத்தி ஆக்கிரமித்துள்ளனர். மேலும் இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுமனை வாங்கியவர்களுக்கு உடனடியாக இது குறித்து தகவல் அளித்தனர்.
தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பல்வேறு மாவட்டத்திலிருந்து விரைந்து வந்த வீட்டு மனை வாங்கியவர்கள் இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து உண்மை சம்பவம் கண்டறியப்பட்டு குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டும் என்றும் மேலும் இது குறித்து திருவெறும்பூர் டிஎஸ்பி மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியவர்களிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளதாகவும் மேலும் இதற்கு தீர்வு ஏற்படவில்லை என்றால் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அவர்களிடம் முறையிட்டு தீர்வு கிடைக்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என நியூ சிட்டி பகுதியில் இடம் வாங்கிய மக்கள் கூறினர்.