நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ளார். கட்சி தொடங்கப்பட்டு விட்டாலும், வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என நடிகர் விஜய் அறிவித்திருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்தை கொண்டு வரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலைச் சந்திக்காத நிலையில் தற்போது கட்சியின் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக உறுப்பினர் சேர்ப்பு அணியை அறிவித்த நடிகர் விஜய், அதற்கு நிர்வாகிகளையும் நியமனம் செய்தார். உறுப்பினர் சேர்க்கைக்காக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன்மூலம் உறுப்பினர் சேர்க்கை கடந்த 8-ம் தேதி தொடங்கியது. அதன்படி மூன்றே நாட்களில் சுமார் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரின் மகன் நூருல் ஹசன் ஃபைசல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். சைவம் திரைப்படத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பணியாற்றிய இவர், நடிகர் விஜயின் தீவிர ரசிகர். கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஈசிஆரில் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததால் மூளையின் செயல்திறன் பாதிக்கப்பட்டு வீல் சேரில் முடங்கிய ஃபைசலுக்கு அவரது வீட்டுக்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.