கடந்த 2018ல் ராஜஸ்தானில் நடந்த பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றதும், அசோக் கெலாட் – சச்சின் பைலட் இருவரும் முதல்வர் பதவிக்கு உரிமை கோரினர். ஆனால் அசோக் கெலாட் முதல்வராகவும், சச்சின் பைலட் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆனால் இருவருக்கும் ஒத்து வராததால் சச்சின் பைலட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து 2020ல் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேருடன் சேர்ந்து கெலாட் அரசுக்கு சச்சின் பைலட் நெருக்கடி கொடுத்தார். ஒருவழியாக தேசிய தலைமை சச்சின் பைலட்டை சமாதானப் படுத்தி வைத்தது. இந்த நிலையில் மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், சச்சின் பைலட் தனியாக (சோலோ) தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் 30ம் தேதி முடிவுற்றவுடன், மக்களை சந்திக்க உள்ளார்.
இதுகுறித்து சச்சின் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘2003, 2013ம் ஆண்டுகளில் செய்ததைப் போல ‘ஜாட்’ மக்களின் ஆதிக்கம் உள்ள பகுதிகளுக்கு சச்சின் பைலட் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்பகுதியில் பாஜகவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதனை முறியடிக்க சச்சின் பைலட் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஆனால் அவரது தனி பிரசாரத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் (ஏ.ஐ.சி.சி) அனுமதி பெறவில்லை. அசோக் கெலாட் விஷயத்தில், ராகுலின் ஆதரவு சச்சின் பைலட்டுக்கு உள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.