மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் பழைய எண்ணெய் எரிவாயு கிணறுகளில் புனரமைப்பு என்ற பெயரில் புதிய வேலைகளை தொடங்கி இருப்பதாகவும் தடுத்து நிறுத்தகோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர், அவர்கள் அளித்த மனுவில் குத்தாலம் சேத்திராபாலபுரம் பகுதியில் உள்ள ஒஎன்ஜிசி நிறுவனத்தின் பழைய எண்ணெய் எரிவாயு கிணறுகளில் விரிவான பணிகள் நடைபெற்ற வருகிறது. இந்த கிணறுக்கான அனுமதி 2011ஆம் ஆண்டு முடிவடைந்து விட்டது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறாமல் எரிவாயு கிணற்றை ஆழப்படுத்த குழாய்கள் உள்ளே செலுத்தப்படுகின்றன. கிணற்றை ஆழமாக்குவதற்கு மாசுக்கட்டுப்பாட்’டு வாரியத்தின் அனுமதி பெறாமல் ஒன்ஜிசி நிறுவனம் பணிகளை செய்து வருகிறது. சட்டவிரோதமாக ஒஎன்ஜிசி செய்து வரும் பணிகளை நிறுத்த கோரியும் ஓஎன்ஜிசியின் ஆவணங்களை பரிசீலிப்பதோடு சமூக செயற்பாட்டாளர்களின் பார்வைக்கு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறைக்கு மனு அளித்துள்ள நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பணிகளை மீண்டும் ஒஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறிய போது உரிய அனுமதி பெறாமல் தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் , இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பணிகளை தடுக்காவிட்டால் அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.