கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து தமிழக அரசு திறந்துவிட்ட 2 டிஎம்சி தண்ணீர் காவிரி கடைமடை வரை சரிவர பாயவில்லை. ஒரு சில ஆறுகளில் மட்டுமே தண்ணீர் சற்று தேங்கியுள்ள நிலையில் அந்த தண்ணீரையும் விவசாயிகள் இரவு பகல் பாராமல் டீசல் இன்ஜின் கொண்டு இறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காருகுடி பகுதியில் வெள்ளையாற்றிலிருந்து பாசன கால்வாய்க்கு தண்ணீர் பாயாதால் விவசாயிகள் டீசல் இன்ஜின் கொண்டு தண்ணீரை வயலுக்குப் பாய்ச்சி வருகின்றனர்.
100 நாள் வயதுடைய நெற்பயிர்களின் கதிர்கள் முற்றும் நிலையில் தண்ணீர் இல்லாமல் கருகி அவை பதறாக
மாறி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வாங்கிய கடனை அடைக்க வேறு வழியின்றி கடும் பனி பொழிவையும் பொருட்படுத்தாமல் இரவு கண் விழித்து விடிய விடிய விவசாயிகள் தண்ணீரை இறைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். டீசல் இன்ஜின் கொண்டு நீர் இறைக்க ஒரு மணி நேரத்திற்கு 250 முதல் 400 வரை செலவாகிறதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.