திருச்சி மாவட்டம், துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்தவர் ராணி (58) . சமயபுரத்தில் நடந்து வரும் திருவிழாவிற்காக தன் வீட்டை பூட்டி விட்டு சமயபுரம் சென்றுள்ளார் இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து கிடப்பதை கண்டு ராணிக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் தெரிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்திருந்த சுமார் 5 பவுன் நகை மற்றும் பணம் மாயமானது தெரியவந்தது
இதேபோல் இவர் வீட்டின் அருகே வசித்து வரும் ஜெயலட்சுமியும் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார். அவரது வீட்டின் பூட்டையும் உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றுள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதே போல் இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி ரோட்டில் உள்ள பகுதியில் பட்டப்பகல் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. துறையூர் பகுதிகளில் கடந்த இரண்டு மூன்று நாட்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.