மயிலாடுதுறையில் தருமபுரம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கல்லூரியின் பின்பகுதியில் உள்ளது. இங்கு கல்லூரிக்கு தேவையான நூலக கட்டடத்தை ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்குமாடியில் கட்ட திட்டமிடப்பட்டு அதன் அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் அங்கு டூவீலரில் வந்து இறங்கிய திமுக நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான குண்டாமணி செல்வராஜ், நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அடிக்கல் நாட்டியதைக் கண்டித்து கட்டட ஒப்பந்தக்காரர்களிடம் வாக்குவாதம் செய்தார். எம்.பி., நகராட்சி தலைவர்,
கவுன்சிலர் என யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் எப்படி வேலையை தொடங்கலாம்? இந்த இடத்துக்கு நகராட்சி தீரமானம் இன்னும் நிறைவேற்றவில்லை.
இங்கே கட்டடம் கட்டிடுவீங்களா,? எப்படி கட்டுறீங்கன்னு பார்க்கிறேன் என வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அங்கிருந்து விலகிச் சென்று காரில் அமர்ந்த எம்எல்ஏ ராஜ்குமார், காரில் அமர்ந்தபடி நகராட்சி தலைவரை சமரசப்படுத்த முயன்றார். இதனால், கோபமடைந்த நகராட்சி தலைவர் குண்டாமணி செல்வராஜ், எம்எல்ஏவிடம் நீ எப்படி இங்க வந்த, நீ காங்கிரஸ் ஓட்டுலயா ஜெயிச்ச… திமுக ஓட்ட வாங்கி தானே ஜெயிச்ச.. அப்படி இருக்கும்போது எம்.பிக்கு தெரிவிக்காம, நகராட்சித் தலைவருக்கு தெரிவிக்காம விழா நடத்துறீங்களா எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.