அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அருள்மிகு ஆபத்து காத்த விநாயகர் கோவில் மிகவும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில். இக் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்று பல்லாண்டுகள் ஆனநிலையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கோவில் திருப்பணி கமிட்டி குழுவினர் இணைந்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்தனர். கோவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தது. இதனை அடுத்து நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை தொடங்கியது. மூன்று கால யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வேள்விகள், திருமுறை பாராயணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழாவை ஒட்டி இன்று காலை யாகசாலை பூஜையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, மேளதாளத்துடன் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்
நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பி விநாயகப் பெருமானை வழிபட்டனர். பின்னர் மூலவருக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு, மாலை அலங்காரம் செய்த பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. குடமுழுக்கை முன்னிட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், திருப்பணி கமிட்டி குழுவினர் செய்திருந்தனர். ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.