Skip to content
Home » புதுவை சிறுமி கொலை…. சிறப்புக்குழு விசாரணை தொடங்கியது

புதுவை சிறுமி கொலை…. சிறப்புக்குழு விசாரணை தொடங்கியது

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி  கடந்த 2-ந்தேதி மதியம் வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென மாயமானாள். இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஒரே ஒரு கேமராவில் மட்டுமே சிறுமி நடமாட்டம் குறித்த வீடியோ பதிவாகி இருந்தது. எனவே அந்த சிறுமி சோலை நகர் பகுதியை விட்டு வெளியே செல்லவில்லை என்பது உறுதியானது. இதை வைத்து போலீசார் வீடு வீடாக சென்று மாணவி குறித்து விசாரித்தனர்.

சந்தேகத்தின்பேரில் கஞ்சா ஆசாமிகள் 5 பேரை பிடித்து விசாரித்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுமியின் உடல் அவளது வீட்டின் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது.  போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் சோலைநகர் பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (57) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்று சாக்கடை கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரும்  போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.  இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை புதுச்சேரி அரசு நேற்று அமைத்தது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை சிறப்புக் குழு பெற்றுக்கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் குற்றவாளிகள் 2 பேர், சந்தேகத்தின் பேரில் விசாரணையில் உள்ள 5 பேரின் ரத்த மாதிரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் தடய அறிவியல் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

சிறுமியின் உடல் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. இதைெயொட்டி அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  ஏற்கனவே சி்றுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *