பழையன கழித்து, புதியன கொள்ளும் கருத்தின் காரணமாக மட்டுமல்ல, உயிரூட்டும் பூமியன்னையின் படைப்பைக் கையேந்தி வாழ்த்தும் பெருந்தன்மையின் காரணமாக மட்டுமல்ல, நாட்டின் நரம்புகள் உழவர்கள்; அவர்களது சொந்தத் திருநாள் இது என்பதற்காக மட்டுமல்ல இந்த விழா, உழைப்பின் உயர்வை உலகத்துக்கு அறிவிக்கிறது எனும் ஒரே காரணத்துக்காக மட்டுமல்ல, இதில் பொதிந்து கிடக்கும் “எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும்” எனும் அரியதோர் கொள்கைக்காகவே, இதனையோர் உவகைக் கூத்தென உள்ளம் வியக்கக் கொண்டாடி மகிழ்கிறோம்.
தமிழர் திருநாளில் தமிழர் அனைவரும் களிப்புடன் கலந்துகொள்ளத் தக்கதான சமுதாய அமைப்பு முறை காண பாடுபட்டாக வேண்டும். உவகை தந்திடும் இந்நாளில் இதற்கான உறுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அறிஞர் அண்ணா 12.1.1969 ‘காஞ்சி’ இதழில் தம்பிக்கு கடிதத்தில் சொன்ன வரிகள் சிந்தையில் மேலோங்கி நிற்கிறது.
சாதி, மதம் கடந்து தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்தப் பொங்கல் திருநாளில் கழக அமைப்புக்களை வலுப்படுத்தவும், இயக்கக் கொடிகளை எங்கும் பரவச் செய்யவும், கண்ணின் மணிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை வைகோ தெரிவித்துள்ளார்.