தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் வரும் சித்திரை மாதம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருவார்கள். தேரோடும் வீதிகளான மேலவீதியில் இருந்து தெற்கு வீதிக்கு திரும்பும் பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கிக்கு எதிரே கழிவு நீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடந்தது. இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தேரோடும் நாளில் மூடப்படாமல் உள்ள கழிவு நீர் வடிகாலில் பக்தர்கள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பணி பாதியில் நிற்கிறது. திறந்த நிலையில் உள்ள கழிவு நீர் வடிகால் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து தண்ணீர் தேங்கி கழிவு நீர் சாலையில் ஓடும் வாய்ப்பும் உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழீவு நீரால் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் வாய்க்காலை உடன் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.