தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத பூராடம் நட்சத்திரத்தில் எம்பிரான் காரிநாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று ஆலயத்தில் எம்பிரான் காரிநாயனாருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், குங்குமம் , பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக காரிநாயகருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு மேள தாளங்கள்
முழங்க பல்லாக்கில் சுவாமிகள் கொலுவிருக்க செய்தனர். அதை தொடர்ந்து சிவ பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய உள் பிரகாரம் பகுதிகளில் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிபுகுந்தனர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற எம்பிரான் காரி நாயனார் குருபூஜை விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.