தமிழக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் புயல் பாதுகாப்பு கட்டிடம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட அரசின் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டனர். சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் சாக்கோட்டை அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், சேவூர் ராமச்சந்திரன், நாகை மாலி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளரிடம் கூறிய சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் சாக்கோட்டை அன்பழகன்,
நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் அனைத்தும் திருப்தியாக உள்ளதாகவும், இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார் மேலும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் வைத்துள்ள தூண்டில் வளைவுடன் கூடிய துறைமுகம், வடிகால் வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற புதிய கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் சாக்கோட்டை அன்பழகன் தெரிவித்தார்.