திருச்சி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் திருச்சி மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள தரைக் கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
பழக்கடைகள் சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அகற்றப்பட்டன. இதில் திடீரென
மாநகராட்சி அதிகாரிகள் வருகை தந்து கடைகளை அப்புறப்படுத்துவதாகவும் கடைகளை அகற்றாமல் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் எனவும் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தரைக்கடை நம்பி பிழைப்பை நடத்தி வரும் நாங்கள் தங்களது கடைகளை அகற்றுவதால் வாழ்வாதாரம் பாதிக்கும் என கூறி மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் காரணமாக திருச்சி புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தினர் அப்போது சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வியாபாரி ஒருவரை காவலர் “ஏய் எந்திரி” என கூறினார். மரியாதை குறைவாக காவல்துறையினர் பேசுவதாக கூறி தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் பெண் வியாபாரி ஈடுபட்டார். அதன் பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை உடைத்து சேதப்படுத்தியதன் காரணமாக தரைக்கடை வியாபாரிகள் அழுது புலம்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.