கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த ஆண்டி செட்டிபாளையம் முதல் கரைதோட்டம் வரை 110 கே.வி உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. விவசாயிகளுக்கு நில மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும், அதன் பிறகு முழு பணத்தையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு செலுத்திய பிறகு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பிறகு பணிகளை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் 8 மாதத்திற்குப் பிறகு தற்போது கடந்த 3 நாட்களுக்கு முன்பு அங்கு வந்த உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வருவாய் மற்றும் காவல் துறை சார்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதபட்சத்தில் இன்றும் விவசாயிகள் மீனாட்சி வலசு என்கின்ற இடத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கப்படும் நிலத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியாளர்கள், அதிகாரிகளின் மேற்பார்வையில் போலீசாரின் பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாங்கள் எப்போதும் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.