கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வழியாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிணத்துக்கடவு நகரை தாண்டிச் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் கடந்து செல்ல முடியும்.
கோவை மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை அழைத்து சென்றுவிட்டு உடுமலை நோக்கி ஆம்புலன்ஸ் இந்த மேம்பாலத்தில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. உடுமலை ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (22) என்பவர் இந்த ஆம்புலன்ஸை ஒட்டி வந்தார்.
இதில் ஆம்புலன்ஸும், பேட்டரி காரும் மேம்பாலத்திலேயே தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த பெட்ரோல் டேங்க் உடைந்து சாலை முழுவதும் பெட்ரோல் கசிந்தது. 2 கார்களும் சாலையில் உரசிபடி சென்றதால் ஏற்பட்ட தீப்பொறிகளால் பெட்ரோல் பற்றி கொண்டு ஆம்புலன்ஸ் முழுவதும் பற்றி எரியத் துவங்கியது.
இதனைக் கண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் வினோத்குமார் உடனடியாக அதிலிருந்து இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு சென்றார். பின்னால் வந்த காரில் இருந்த கோகுல், சீட் பெல்ட் அணிந்திருந்ததால், ஏர்பேக் திறந்துள்ளது. இதனால் அந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்த போதும், கோகுல் காயங்களின்றி உயிர் தப்பினார்.
சாலையில் ஆம்புலன்ஸ் பற்றி எரிவதைக் கண்ட வாகன ஓட்டிகள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆம்புலன்ஸில் பற்றி இருந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து கிரேன் மூலம் இரண்டு வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீராக்கப்பட்டது. இந்த சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.