தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டை சேர்ந்த முத்து என்பவரது மகன் வடிவேல் முருகன் (28). இவர் கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் பைக்கில் ஊருக்குச் திரும்பிக் கொண்டிருந்தார். தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலை பொட்டலூரணி விலக்கு அருகே சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். அந்தக் கொலையில் தேடப்பட்ட தூத்துக்குடி வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (28), அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (25),
திருநெல்வேலி நாரண மலப்புரம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து (32) ஆகிய 3 பேர் திருச்சி ஐந்தாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று மதியம் 12.30 மணிக்கு சரணடைந்தனர்.
மாஜிஸ்திரேட்டு பாலாஜி 3 பேரையும் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.