பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுவிட்ட நிலையில் மீண்டும் அதிமுகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சி செய்து வந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருக்கவே அதிமுகவில் உள்ள முக்கியப் புள்ளிகளை பாஜகவுக்கு கொண்டு வரும் பணியில் பாஜக இறங்கியுள்ளது.
அதன் தொடக்கமாக முன்னாள் எம்எல்ஏ-க்கள் 15 பேர் உட்பட பலரை அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு இழுத்தார்கள். அடுத்த விக்கெட்களாக அதிமுகவின் மிக முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளார்கள் என்று பாஜக தரப்பில் இருந்து தொடர்ந்து செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
கோவை பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டவர்கள் பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு இருவரும் உடனடியாக மறுப்பு தெரிவித்தனர்.
வேலுமணியைப் போலவே ராஜேந்திரபாலாஜியும் பாஜகவில் இணையப் போகிறார் என்று அப்போதிருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அடுத்ததாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியான நிலையில் நேற்று இரவு விருதுநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கோகுல இந்திரா அதற்கு மறுப்பு தெரிவித்து கடுமையாக பதில் அளித்துள்ளார்.
“நானும், ராஜேந்திர பாலாஜியும் பாஜகவில் இணையப் போவதாக வதந்திகளை பரப்புகிறார்கள். இங்கே அதிமுகவில் ராணி போலவும் ராஜா போலவும் இருக்கும்போது நாங்கள் எதற்காக பாஜகவில் இணைய வேண்டும்?” என்று கோகுல இந்திரா கேள்வி எழுப்பினார். கோகுல இந்திராவின் இந்த பேச்சை டேக் செய்து நடிகை காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் தளத்தில் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.
அதில், ‘வதந்திகளிலும், விளம்பரங்களிலும் வாழ்கிறது, பாஜக. வெறுப்பையும் போலித்தனத்தையும் வாந்தி எடுக்கிறது. ஊழல் பணத்தில் நோட்டா கட்சி, ஒத்த ஓட்டு கட்சி ஆட்சியில் உள்ளது. #GoBackModi என்று சொல்லத் தேவையில்லை. அவர் தானாவே தமிழ்நாட்டிலிருந்து போய்விடுவார்’ என்று விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம்.