கடந்த 25ம் தேதி இரவு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இரண்டு நாட்டிகல் மைல் தொலைவில் அக்கரைப் பேட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் சீச்சாங்குப்பத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர் உடன் ஏற்பட்ட தகராற்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த இரட்டைகொலை சம்பவம் மீனவ கிராமங்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உயிரிழந்த மீனவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டும், இழுவை மடி வளையை தடை செய்ய வேண்டும், 1983ல் நாட்டு படகு மீனவர்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் அடுத்தகட்டமாக மூன்றாம் நாளான இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருதாலுக்கா மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக பேரணியாக வந்த மீனவர்கள் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும், 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இழுவைமடி வளையை தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதிகேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் முகப்புக்கதவு மூடப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகையில் 2 மீனவர்கள் கொலை…. கலெக்டர் அலுவலகம் முற்றுகை…
- by Authour