எதிர்நீச்சல் என்ற டி.வி. தொடரில் நடித்து வரும் நடிகை மதுமிதா தனது காதலனுடன் காரில் இரவு 9 மணியளவில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பிரபலமான கோவிலுக்கு சென்று விட்டு ஒரு வழிபாதையில் அத்துமீறி காரில் வந்தார்.
அக்கரை வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல அவர் முற்பட்டார். திடீரென நடிகையின் கார் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் எழுத்தராக வேலை பார்க்கும் ரவிக்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவிக்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காரில் வந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது டி.வி. நடிகை மதுமிதா நான் யார் தெரியுமா, அந்த டிவியில் நான் பெரிய ஆள் என பந்தா காட்டி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். என் மீது எந்த தப்பும் இல்லை. ஒன்வேயில் வந்ததெல்லாம் ஒரு தப்பா? என்று ஏகத்துக்கு பேசினார்.
போலீஸ்காரர்தான் வேகமாக வந்தார் . அவர் மீது தான் தப்பு என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடிகை அவரது காதலன் பேச்சை பார்த்தால், அவர்கள் போதையில் இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் இருவருக்கும் மது போதை டெஸ்ட் எடுத்தனர். பின்னர் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்து மதுமிதா மீது பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், சிறு காயங்கள் ஏற்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காயம் அடைந்த ரவிக்குமார் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். கர்நாடகாவை சேர்ந்த மதுமிதாவுடன் காரில் பயணம் செய்த காதலன் அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும் சென்னையில் ஐ.டி. துறையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.