Skip to content
Home » விண்வெளிக்கு செல்லும் தமிழர் அஜித் கிருஷ்ணன்….. ஜனாதிபதியிடம் தங்க பதக்கம் பெற்றவர்

விண்வெளிக்கு செல்லும் தமிழர் அஜித் கிருஷ்ணன்….. ஜனாதிபதியிடம் தங்க பதக்கம் பெற்றவர்

  • by Senthil

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் 4 இந்தியர்களின் பெயர்களை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் . 19.4.1982 அன்று  சென்னையில் பிறந்த இவர், தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்றவர் ஆவார். விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியிடம் இருந்து தங்கப்பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றை பெற்றவர்.

கடந்த 21.6.2003 அன்று இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவில்  சேர்ந்த இவர், பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.  மிகவும் சவாலான பணியான, இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கு ‘டெஸ்ட் பைலட்’டாகவும் இருந்துள்ளார். இவர் 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் பெற்றவர்.

பல்வேறு அதிநவீன விமானங்களை ஓட்டிய அனுபவம் வாய்ந்த இவர்,  நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பணியாளர்கள் சேவைக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்.

விண்வெளிக்கு செல்லும்  இன்னொரு விமானி பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் கேரளாவைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 47. விமானி அங்கத் பிரதாப், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 41. விமானி சுபன்சு சுக்லா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு வயது 38 ஆகும். இவர்களும், இந்திய விமானப்படையின் போர் விமான பிரிவில் பணி அமர்த்தப்பட்டு பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்.

இவர்கள், பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிற்கு விண்வெளிக்கு பயணித்து, அங்கு 3 நாட்கள் ஆய்வுகளை மேற்கொண்டு, பூமிக்கு திரும்புவதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக இவர்கள் ரஷ்யாவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!