கரூர், தாந்தோன்றிமலையில் தென்திருப்பதி என போற்றப்படும் கல்யாண வெங்கடரமணசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக தெப்ப திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாசிமக திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், வெள்ளி ஹனுமந்த வாகனம், வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனங்களில் சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 22-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும், 24-ந்தேதி தேரோட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் தெப்ப உற்சவத்தையொட்டி கோவிலின்
முன்பு உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. தண்ணீரில் மிதந்து செல்லும் வகையில் தெப்பத்தேர் உருவாக்கப்பட்டு குளத்தில் விடப்பட்டது. தெப்பத்தேரானது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பஉற்சவத்தையொட்டி, கோவிலில் இருந்து ஸ்ரீதே
வி, பூதேவியுடன் வெங்கடரமணசாமி தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது வேதமந்திரங்கள் முழங்க வெங்கடரமணசாமிக்கு சிறப்பு பூஜை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் தெப்பஉற்சவம் நடந்தது. இதைக்கண்ட பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… கோஷத்துடன், சாமி தரிசனம் செய்தனர். விழாவில், கரூர், தாந்தோன்றிமலை, திருமாநிலையூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.