கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கீழ சிந்தலவாடி கிராமத்தில் பிரபு – சரண்யா தம்பதியினர் இரண்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்திருந்த மனுவின் மீது பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் முன்னுரிமை அடிப்படையில்
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்று, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த அவர்கள், தனது இரண்டு குழந்தைகளுடன் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் கொண்டு வந்த மண்ணெண்ணையை, தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றி அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வீட்டுமனை பட்டா கேட்டு குழந்தைகளுடன் ஒரு குடும்பமே தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.