தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் கடம்பன்குடி மற்றும் மாறனேரி, சோழகம்பட்டி, இந்தலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை முடிந்துள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் விற்பனைக்காக நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடம்பன்குடியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம், திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். கடந்தாண்டு நெல் கொள்முதல் நிலையம் திறந்து செயல்பட்ட நிலையில், நடப்பாண்டும் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்திற்கு தயாராகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என். வி. கண்ணன், உடனடியாக, மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, அதன் அடிப்படையில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் சி. எம். அசோக்குமார் முன்னிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எம். ரமேஷ், ஆர். உதயகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.