புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (திங்கட் கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கருணாநிதி நினைவிடத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டு உள்ளன.
மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு உள்ளே சென்றவுடன் இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் நம்மை வரவேற்பது போன்று அமைந்துள்ளன. இந்த சிலைகள் அருகே அண்ணா அமர்ந்து புத்தகம் படிப்பது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணா சமாதிக்கு பின்னால் கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ளது. கருணாநிதி அமர்ந்து எழுதுவது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
கருணாநிதியின் சமாதியில் ‘ஓய்வு இல்லாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. தனது மறைவுக்கு பின்னர் இந்த வாசகத்தை தனது சமாதியில் எழுத வேண்டும் என்று கருணாநிதி முன்கூட்டியே சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றதற்காக கருணாநிதியை பாராட்டி சோனியாகாந்தி கடந்த 8.11.2005 அன்று எழுதிய கடிதம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு அவரது நினைவிடம் அருகே வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை தனது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கருணாநிதி சுட்டிக்காட்டிய கடிதத்தின் கல்வெட்டும் அதன் அருகே வைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தை சுற்றிலும் கருணாநிதியின் பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன. அவரது சமாதியின் பின்புறம் வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் அவருடைய உருவம் பிரமாண்டமாக பொறிக்கப்பட்டுள்ளது.
இது உதயசூரியன் வடிவமைப்பை கொண்டுள்ளது. பகல் நேரத்தில் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் கருணாநிதியின் இந்த தோற்றம் இரவு நேரத்தில் ‘லேசர்’ மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நவீன வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருணாநிதி சமாதியை சுற்றி பார்த்தவுடன், 20 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் உள்ளே நுழைந்ததும் குளுகுளு ஏ.சி. காற்று மனதை வருடுகிறது. கருணாநிதி எழுதிய புத்தகங்களின் பெயர்கள் ‘க’ என்ற ஒற்றை எழுத்தில் உள்ளடக்கி பொறிக்கப்பட்டு உள்ளது.
இந்த எழுத்துதான் ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தின் இலச்சினை ஆகும். ‘கலைஞர் எழிலோவியங்கள்’ என்ற பெயரில் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. இதில் கருணாநிதியின் இறுதிப்பயண புகைப்படங்களும், ‘அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதமும் இடம் பெற்றுள்ளது. இது மனதை கலங்க வைக்கின்றன. ‘உரிமை வீரர் கலைஞர்’ என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் நுழைந்தால் ஆச்சரியம் காத்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை மாநில முதல்-அமைச்சர்கள் ஏற்றிடும் உரிமையை பெற்று தந்து சென்னை கோட்டையில் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காட்சி அமைப்பு ‘3 டி’ தொழில்நுட்பத்துடன் இடம் பெற்றுள்ளது.
கம்பீரமாக நின்றபடி தனது குரலில் கருணாநிதியே பேசுவது போன்ற வியப்பு ஏற்படுகிறது. ‘கலைஞருடன் ஒரு செல்பி’ என்ற பெயரில் ஒரு அரங்கு அமைந்துள்ளது. இங்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவுக்கு அரசு சார்பில் அழைப்பிதழ் அச்சடிக்கப்படவில்லை. நிகழ்ச்சியாகவே நடத்தப்படுகிறது என்றாலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திமுக நிர்வாகிகள் இந்த விழாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.