திருச்சியில் இன்று மத்திய-வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி கலந்து கொண்டார். வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் எம்எல்ஏ பழனியாண்டி, திருச்சி மத்திய மாநகர செயலாளரும் மேயருமான அன்பழகன், பொருளாளர் துரைராஜ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பகுதி செயலாளர்கள் காஜாமவை விஜய், ராம்குமார் உள்ளிட்டோர் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிறது. கட்சிக்காரர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கதாத நிலையே தொடர்கிறது என ஆதங்கமாக பேசினர். அதிலும் பகுதி காஜாமலை விஜய் இது குறித்து மாவட்ட செயலாளரிடமும் மாநகர செயலாளரிடமும் பல முறை கூறிவிட்டோம் அவர்கள் சமாதனப்பறவைகளாகவே உள்ளனர் என்றார். இந்த ஆதங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி..” நீங்கள் கூறும் தகவல்களை எங்கு சொல்ல வேண்டுமோ அவ்வப்போது சொல்ல விடுகிறோம். என்னை பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளில் நான் எந்த அலுவலகத்திற்கும் எந்த வேலைக்காகவும் எந்த அலுவலகத்திற்கு போய் நின்றது இல்லை. அதேபோல் எந்த காண்டிராக்ட்டையும் கேட்டு எங்கேயும் பேசியது இல்லை என்பதனை மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். நிர்வாகிகளுடன் துணையுடன் நான் மாவட்ட செயலாளராகி 4 ஆண்டுகள் முடிந்து 5 வது ஆண்டு துவங்கியிருக்கிறது. இந்த பதவி காலத்தில் ஒரு அடி இடம் கூட நான் வாங்கவில்லை என்பதனை தைரியமாக சொல்லிக்கொள்கிறேன் ” என பேசிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட மாவட்ட துணை செயலாளர் முத்துசெல்வம் “ஏழை மாவட்ட செயலாளர் என கூற”.. உடனே வைரமணி… #இல்லை இல்லை நான் கோடீஸ்வரன் தான்… விவசாயம் செய்து கொண்டிருக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் அரை காணியாவது வாங்கிவிடுவேன். தற்போதும் கூட என் குடும்பத்தை நான் கவனித்துக்கொள்ள முடியும். கட்சிக்காரர்களுக்கு செலவு செய்யும் அளவிற்கு எனக்கு வசதி இல்லை என்பதை தான் குறிப்பிட்டேன். எனது தந்தைக்கு இணையானவர் அமைச்சர் நேரு, அவரை தவிர வேறு யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்” என உணர்ச்சி வசப்பட்டு பேசினார் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி. மாவட்ட செயலாளரின் இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..