தமிழர்களின் வழிபாட்டில் மாசி மகம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாசி மகத்தன்று சிவபெருமான் தனது திருவிளையாடல்களை அதிகம் செய்த நாளாகவும் கருதப்படுகிறது. அது போன்று பொதுமக்கள் தனது முன்னோர்களின் தோஷம் நீங்கி அவர்களின் ஆத்மா தங்களின் குடும்பத்திற்கு ஆசீர்வாதம் வழங்க பிதுர் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்யும் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
மாசிமகத் தினத்தன்று நதிகளில் நீராடுவதை ‘பிதுர்மஹா ஸ்நானம்’ என்றும் கூறுவார்கள். மக நட்சத்திரத்துக்கு ‘பித்ருதேவா நட்சத்திரம்’ என்ற பெயரும் உண்டு. இந்தப் பித்ருதேவா தான் முன்னோர்களுக்கு ஆன்ம சாந்தியை அளிப்பவர். முன்னோர்கள் ஆத்ம சாந்தியுடன் இருந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்குமென்பது நம்பிக்கை. மற்ற தினங்களில் பித்ருக்களை வழிபடாவிட்டாலும், மாசிமகத்தின் போது நீராடி பித்ருக்களை வணங்கினால்
முன்னோர்கள் ஆத்ம சாந்தி பெற்று, நமக்கும் நம் சந்ததியினருக்கும் அருள்புரிவார்கள் என்பது ஐதீகம்.
அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் கொள்ளிடம் கரையில் வைத்தியநாதசுவாமி ஆலயம் முன்பு இன்று பிதுர் தர்ப்பணம் கடைப்பிடிக்கப்பட்டது. பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர். வாழை இலையில் பழம் காய்கறிகள் ஆகியவற்றோடு எள்சாத பிண்டம் படைத்து முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் பிண்டத்தை ஆற்றில் கரைத்து நீராடி சிவபெருமானை தரிசனம் செய்து மாசிமக வழிபாட்டை நடத்தினர். இதுபோன்று அரியலூர் மாவட்டத்தில் அணைக்கரை திருமானூர் மற்றும் கொள்ளிடக் கரையோர கிராமங்களிலும் நீர்நிலைகளிலும் இன்று பிதுர்தர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது.