திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலராக பொறுப்பு வகிப்பவர் வேலம்மாள். இவர் 2014 முதல் 2021 வரையிலான காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி எஸ்கால் தலைமையிலான போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அதேபோல, வேலம்மாளின் மகள் கிருஷ்ணவேணியின் வீடு, கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரில் உள்ளது. அங்கு கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏடிஎஸ்பி ஹெக்டர்தர்மராஜ் தலைமையில் சோதனை நடைபெற்றது. ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையில், ஏராளமான வங்கி பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் சிக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.