Skip to content
Home » தேர்தலுக்கு பின் அமைச்சரவையில் மாற்றம்…. முதல்வர் பரபரப்பு பேச்சு

தேர்தலுக்கு பின் அமைச்சரவையில் மாற்றம்…. முதல்வர் பரபரப்பு பேச்சு

  • by Authour

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று  காணொலி வாயிலாக நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  பங்கேற்று உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:

மாவட்டக் கழகச் செயலாளர்கள் – தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் நேற்று சட்டமன்றம் முடிந்தவுடன் இன்று காணொலி வாயிலாக நடத்துகிறோம்.

நேற்று நான் சட்டமன்றத்தில், ஒரு அழைப்பு விடுத்தேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நினைவிடமும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற 26-ம் தேதி, மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது.

தாய் தமிழ்நாட்டையும் – நம் கழகத்தையும் காத்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிகப் பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாக நாம் நடத்துவதால், அந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன்.

அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது.

இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கழகத்தினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும்.

நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும். இவை அனைத்தையும் இப்போது நாம் தீர்மானமாகப் போட உள்ளோம்.

தேர்தலுக்கு பிறகு கட்சியிலும், அரசிலும் மாற்றங்கள் இருக்கும்.

நன்றி. வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *