கரூர் மாவட்டத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் அமைந்துள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் மதுபான பாட்டில்களில் அச்சடிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.பி விலைக்கு மேல், குவாட்டர் பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்வதாக பொதுமக்கள் மூலமாக, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சென்னை தலைமையகத்துக்கு புகார் சென்றுள்ளது.
இந்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கரூர் மாவட்ட மேலாளருக்கு தலைமையகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் கரூர் மாநகர பேருந்து நிலையத்தின்
பின்புறம் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையிலான குழுவினர் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த தணிக்கையின் போது சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் விற்பனையான மதுபானங்களுக்கு மேல் 1,900 ரூபாய் தொகை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட கடையில் பணிபுரியும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட மேலாளர் இடம் விளக்கம் கேட்டபோது ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. ஆனால், வசூலான தொகைக்கு மேல் அதிக தொகை எப்படி வந்தது என்று கடிதம் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து விட்டு தனது குழுவுடன் அங்கிருந்து சென்றதாக தெரிவித்தார்.