விளைப் பொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும் , கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டில்லிக்கு செல்லும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தடியடி, துப்பாக்கி சூடு போன்ற வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும், இதனை கண்டித்தும் இந்தியா முழுவதும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் உள்ள சேனாபதி கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி விவசாய பிரதிநிதிகள் சண்முகசுந்தரம், வேலுமணி ஆகியோர் செல்போன் டவரில் ஏறி முழக்கங்களை எழுப்பினர். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று விவசாயிகளை கீழே இறங்கும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.
பலமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கீழே இறங்க மறுத்து விட்டதால், அரியலூர் தீயணைப்பு
நிலைய அலுவலர் கோ.செந்தில் குமார் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் டவரின் மீது ஏறி சமாதானம் செய்து எந்தவித காயமுமின்றி 2 பேரையும் பத்திரமாக மீட்டு அரியலூர் வட்டாட்சியர் ஆனந்த வேலிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.