திருச்சி மாவட்டம், துறையூர் ஆத்தூர் சாலையில் அமைந்துள்ள பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தகவல் இருந்த துறையூர் வனத்துறை அதிகாரிகள் விபத்தில் பலியான புள்ளி மானை மீட்டு குறிச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான காப்புக் காடுகள் மற்றும் பச்சைமலை கொல்லிமலை அடிவாரம் நிறைந்த பகுதியாக உள்ளது. தற்பொழுது கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் வனவிலங்குகள் சாலையில் சுற்றி திரிய ஆரம்பித்துள்ளன. இதனால் சாலைகளில் அதிக அளவில் விபத்துக்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. காட்டிலிருந்து கிராமப்புறங்களுக்கும் சாலைகளுக்கும் குடிநீர் தேவைக்காக வரக்கூடிய வன விலங்குகளை பாதுகாக்க வனப்பகுதிகளிலேயே பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் எனவும் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.