தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே தளவாபாளையம் தனபாக்கியத்தம்மாள் நகரை சேர்ந்தவர் மனோகரன் (62). கூட்டுறவு துறையில் சார்-பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு துக்கத்திற்கு வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார். இந்நிலையில் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு மனோகரன் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 24 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாபநாசம் டிஎஸ்பி அசோக், அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் இளவரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தஞ்சாவூரில் இருந்து மோப்பநாய் சோழா வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடய அறிவியல் நிபுணர் கார்த்திக், தடயங்களை பதிவு செய்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.