முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை திறந்து வைக்கிறார். இதற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் பேசியதாவது: நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற நம் தலைவர் கலைஞரின் நினைவிடம் கட்டும் பணிகள் நி்றைவடைந்ததையொட்டி இதன் திறப்பு விழா வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. இதனை ஒரு விழாவாக நடத்தாமல், நிகழ்ச்சியாக நடத்துவதால் அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை.
இந்த நிகழ்ச்சியில் ஆளுங்கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சி, தோழமை கட்சி, கூட்டணி கட்சி என அனைவரும் பங்கேற்கும்படி அழைக்கிறேன். பொதுமக்களும் இதில் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியோடு, தாய் தமிழகத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.