தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மாதத்தில் ஒரு நாள் ஒரு வட்டத்தில் தங்கி ஆய்வு செய்யும் திட்டம் உங்களைத் தேடி உங்கள் ஊரில். கடந்த மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டாவது மாதமாக கரூர் மாவட்டத்தில் இன்று புகழூர் வட்டத்தில் தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று ஓட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். அங்குள்ள அடிப்படை வசதிகள், கட்டுமானப் பணிகள், மருந்துகள் இருப்பு, சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சந்தோஷ்குமாரிடம் கேட்டறிந்தார். அப்போது அங்கு சிகிச்சைக்கு வந்தவர்களிடம் முறையாக
சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். போதிய பேருந்து வசதியும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு சுடு தண்ணீர் தேவை என்றாலும் 3 கி.மீ தூரம் சென்று வாங்கி வரும் சூழ்நிலை இருப்பதாக தெரிவித்தனர். அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துச் சென்றார். இதே போன்று புகழூர் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களை இன்றும் நாளையும் ஆய்வு செய்யவுள்ளார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.