திருச்சி உக்கடை அரியமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் பள்ளியில் ஆண்டு விழா, மற்றும் விளையாட்டு விழாவானது பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி வார்டு கவுன்சிலர் சுரேஷ் கலந்துகொண்டு பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக நாடகம், நாட்டுபுற நடனம், பட்டிமன்றம், சிலம்பம், யோகா, என பல்வேறு பிரிவுகளில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொது மக்கள், பெற்றோர்கள், மற்றும் மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.