உலகத் திருக்குறள் கூட்டமைப்பு . தலைவர் அரிமா. மு. ஞானமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கிறது.
உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்கு புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லை. இன்றைக்கு உலகம் முழவதும் 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாச்சாரமும், அறிவு சார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்படுவதை, மக்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி ‘வங்க மொழி இயக்கம்’ உருவானது. இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் நடவடிக்கையால், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியது. கடந்த 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. வங்கதேசத்தைப் போல் இந்தியாவில், தமிழ்நாட்டில் 1938, 1965ம் ஆண்டுகளில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் பலருக்கும் நினைவிற்கு வரலாம்.
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில், நடைபெற்ற போராட்டத்தில் 1939ம் ஆண்டு நடராசன், தாளமுத்து இருவரும் உயிரிழந்தனர். தொடர்ந்து 1965ம் ஆண்டு இரண்டாம் கட்ட போராட்டத்தில் * மொழிக்காக தீக்குளித்த உலகின் முதல் வீரர் கீழப்பழுவூர் சின்னச்சாமிஆவார். மொழிப்போரில் கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை இராசேந்திரன், சத்தியமங்களம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், கோவை பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி மற்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
அதன் விளைவாக தமிழ்நாட்டில் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 21 தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. ஆனால், பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்று கூறி, 2006ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் 23, 968 அரசுப் பள்ளிகள் தமிழ் வழிக் கல்வியில் இருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறியுள்ளன. ஆனால், தனியார் சுயநிதிப் பள்ளிகளில், 45, 000 மாணவர்கள் தமிழ் வழியில் பயின்று வருகின்றனர்.
எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். தனியாரால் நடத்தப்படும் தாய்த் தமிழ் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக்க வேண்டும். இந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கி உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
*உலகத் திருக்குறள் கூட்டமைப்பு நிருவாகிகள் தங்கள் பகுதியில் பொதுவெளியிலோ பள்ளி கல்லூரிகளிலோ 21-2-2024 அன்று உலகத் தாய்மொழி தினத்தை சிறப்பாக கொண்டாடி தாய்மொழின் முக்கியத்துவத்தை பொது மக்களும், மாணவர்களும் உணரும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.