சென்னை கோயம்பேடு நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஹேம்நாத் என்பவரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவருக்கு அபராதம் விதித்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
அப்போது ஹேம்நாத் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாவியை தரமறுத்துள்ளார். மேலும் போலீஸாரின் சட்டையைப் பிடித்து இழுத்தது ஆபாசமாக பேசி செல்போனை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை காலால் எட்டி உதைத்து சரமாரி தாக்கினர். இதனை அந்த பகுதியில் இருந்த பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மேலும் இது குறித்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவிட்டனர். இதையடுத்து ஹேம்நாத்தை தாக்கிய கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆய்வாளர் சக்திவேல், முதல் நிலை காவலர்கள் தினேஷ், அருள் ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து இணை ஆணையர் தேவராணி உத்தரவிட்டுள்ளார்.