சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கரும், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங்கும் போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெற்றது. மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரி எண்ணினார்.
காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் மனோஜ் சோன்கர் சண்டிகார் மேயராக பதவியேற்றார்.
இதனிடையே, தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டு எண்ணிக்கையின்போது முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது எனக் கூறிய மேயர் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சண்டிகார் மேயர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் மேயர் பதவியை மனோஜ் சோன்கர் நேற்று இரவு ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் திடீரென பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய கவுன்சிலர்களான பூனம் தேவி, நேஹா மற்றும் குர்ஷரம் கலா ஆகிய 3 பேரும் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். மேயர் தேர்தல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் 3 கவுன்சிலர்கள் பா.ஜ.க.வில் இணைந்த சம்பவம் சண்டிகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நி்லையில் மேயர் தேர்தல் தில்லுமுல்லு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. தேர்தல் அதிகாரி கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி சரமாரி கேள்விகள் கேட்டார். வாக்கு சீட்டில் பேனாவால் என்ன எழுதினீர்கள். எழுதும்போது கேமராவை பார்த்துஐ என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என சரமாரி கேள்விகள் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அதிகாரி, அடையாளத்திற்காக டிக் செய்தேன் என கூறினார். பின்னர் வழக்கை நீதிபதி நாளைக்கு ஒத்தி வைத்தார்.