நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைமைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து பிரதான கட்சிகளும் ஆயுதமாகி வருகிறது. இந்த முறை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் பாஜக தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தான், கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பும் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுகவுடன் கைகோர்க்கவுள்ளதாகவும், அக்கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கூட்டணியில் எம்பி பதவி வழங்கப்பட உள்ளதாகவும் முன்பு தகவல் வெளியாகி இருந்தது. இதன்பின், மக்கள் நீதி மய்யம் தேசிய கட்சியான காங்கிரஸுடன் கூட்டணி வைப்பார் எனவும் சமீப நாட்களாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
இந்த சமயத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க நாளான பிப்.21-ம் தேதி அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார். அப்போது, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று சென்னை ஏர்போட்டில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மநீம தலைவர் கமல்ஹாசனிடம் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து கமல் கூறியதாவது, தக் லைஃப் திரைப்படத்தின் முன்னேற்பாடு பணிகளை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து இப்போதுதான் சென்னை திரும்பியிருக்கிறேன். இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். வெளிநாட்டில் இருந்து எந்த நல்ல முடிவையும் நான் எடுத்து வரவில்லை. இங்கே தான் நல்ல முடிவுகளை உருவாக்க வேண்டும். இதனால் 2 நாட்களில் எனது நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்றார்.