அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிலிச்சிக்குழி கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டரை வயதுடைய இளைய மகன் சர்வேஸ்வரன் தெருவில் விளையாடி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சிறுவனை காணவில்லை. இதனையடுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். அப்போது அதே கிராமத்தில் வடக்கு காலனியில் மினி டேங்க் அருகே ஊராட்சி நிர்வாகத்தால் கழிவு நீர் வடிக்காலுக்காக வெட்டப்பட்ட உறை குழியில் சர்வேஸ்வரன் விழுந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவனது தாயார் ஜெயலஷ்மி சிறுவனை மீட்டு பார்த்தபோது, சிறுவன் இறந்து இருப்பது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சிறுவன் விழுந்து பலியான கழிவு நீர் வடிக்காலுக்காக வெட்டப்பட்ட உறை குழி ஊராட்சி நிர்வாகத்தால் வெட்டப்பட்டு கடந்த ஒரு வருடமாக மூடாமல் அப்படியே விட்டதால் சிறுவன் தவறி குழியில் விழுந்து இறந்து விட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.