பாராளுமன்ற தேர்தலுக்கு சிலவாரங்களே உள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மாற்றப்பட்டு செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டவுடனேயே பல மாநிலங்களின் தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என தகவல்கள் வெளியானது. அப்போது சட்டமன்ற குழு தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. புதிய தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்புதெரிவித்து கே எஸ் அழகிரிக்கு ஆதரவாக மாவட்டத்தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் டில்லிக்கு பயணம் மேற்கொண்டு அழகிரியை மாற்றக்கூடாது என கோரிக்கை வைத்தனர். நிர்வாகிகள் எதிர்ப்புகாரணமாக மாநிலத்தலைவர் மாற்றத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு சில வாரங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் மாநிலத்தலைவர் மாற்றம் காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறையும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அப்போதைய மாநிலத்தலைவர் திருநாவுகரசர் டில்லிக்கு அழைக்கப்பட்டு அவருக்கு எம்பி சீட்டு என வாக்குறுதி அளிக்கப்பட்டு கேஎஸ் அழகிரி மாநிலத்தலைவராக நியமனம் செய்தார். இந்த முறை யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார் அழகிரி. இதற்கு காரணம் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நடந்த கூட்டம் தான் காரணம் என்கின்றனர் நிர்வாகிகள். சுமார் 10 நாட்களுக்கு முன்னர் தற்போதைய எம்பிக்கள் 8 பேருடன் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி ZooM மீட்டிங் நடத்தினார். அப்போது கரூர் எம்பி ஜோதிமணிக்கும் கேஎஸ் அழகிரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கரூர் பாராளுமன்ற தொகுதியில் சார்பில் ஜோதிமணி போட்டியிட காங்கிரசார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அழகிரி சில கேள்விகளை கேட்க இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாககூறப்படுகிறது. மேலும் கலெக்டர் அலுவலகத்திற்குள் ஆர்பாட்டம் நடத்தியது, கூட்டணி கட்சி என பார்க்காமல் திமுக நிர்வாகிகளை விமர்சனம் செய்ததுபோன்ற சம்பவங்களால் திமுகவினரும் அதிருப்தியில் உள்ள நிலையில் கட்டாயம் சீ ட்டு தாருங்கள் என எங்களால் எப்படி அழுத்தம் கொடுத்து பேச முடியும் என அழகிரி கூறியுள்ளார். இந்த வாக்குவாதம் குறித்து கார்கேவிடமும் கர்நாடகா மாநிலத்துணை முதல்வர் சிவக்குமாரிடமும் ஜோதிமணி புகார் கூறியிருக்கிறார். ஏற்கனவே 5 ஆண்டுகாலமாக மாநிலத்தலைவராக இருக்கும் கேஎஸ் அழகிரியை மாற்ற கார்கே முடிவு செய்திருந்த நிலையில் இந்த புகார் கேஎஸ் அழகிரிக்கு பெரும் பின்னடைவாக இருந்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்..