மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்கள் வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கோரும் மத்திய அரசின் மின்சார வாரிய ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டி ல்லி நோக்கி கடந்த 13ம் தேதி முதல் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் செல்ல முயற்சி செய்து வருகின்றனர்.
குறிப்பாக அரியானா, பஞ்சாப், உபி மாநில விவசாயிகள் டில்லியை நோக்கி செல்ல முயன்று வருகிறார்கள். இதனால் டில்லியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டில்லியில் குவியும் விவசாயிகளை கலைக்க கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு, தடியடி போன்ற பிரயோகங்களை போலீசார், துணை ராணுவத்தி்னர் நடத்தி வருகிறார்கள்.
டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து தஞ்சையில் இன்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக காலையிலேயே தஞ்சை ரயில் நிலையத்தில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு, காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி. ஆர் பாண்டியன் ஆகியோர்தலைமைமையில் இந்த போராட்டம் நடந்நதது. 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
சரியாக 11 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சை ரயில் நிலையம் வந்தது. அப்போது விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டவாளத்தில் அமர்ந்திருந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது வி்வசாயிகள் கோஷம் போட்டனர். போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும் 10 நிமிடத்தில் விவசாயிகளை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர். அதன் பிறகு ரயில் சென்னை புறப்பட்டு சென்றது.