நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வகுமார் வயது 27. இவர் தனக்கு சொந்தமான லோடு ஆட்டோவில் தான் சொந்தமாக வைத்திருக்கும் கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கோல் சுருணைகளை சிறுநாவலூர் ஊராட்சி கட்டப்புளி பகுதியை சேர்ந்த வைரப் பெருமாள் என்பவர் தோட்டத்திலிருந்து ஏற்றிக்கொண்டு எரகுடி நோக்கி செல்லும் பொழுது சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. அப்பொழுது காற்று பலமாக வீசியதால் ஆட்டோவில் ஏற்றப்பட்டிருந்த 60 வைக்கோல் சுருணைகளில் தீ வேகமாக பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலின் பேரில் உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினர் நிலைய பொறுப்பாளர் சங்கப்பிள்ளை தலைமையில் ஐந்து வீரர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இத்தீ விபத்தில் லோடு ஆட்டோ முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. விபத்து பற்றி உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கட்டப்புளியில் இருந்து எறகுடி செல்லும் சாலையில் தாழ்வாக குறுக்கே செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைத்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட மின்துறையினர் அலட்சியமாக இருப்பதால் இது போன்ற தீ விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர்.