Skip to content
Home » 1330 குறளையும் சரளமாக ஒப்புவிக்கும் தஞ்சை மாணவிகள்….. முதல்வர் கவுரவிக்க கோரிக்கை

1330 குறளையும் சரளமாக ஒப்புவிக்கும் தஞ்சை மாணவிகள்….. முதல்வர் கவுரவிக்க கோரிக்கை

தஞ்சாவூர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவிகள் இருவர் 1330 திருக்குறளையும் அட்சரம் மாறாமல் அட்டகாசமாக கூறி அனைவரின் விழிகளையும் உயர்த்த வைக்கின்றனர்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது… பட்டென்று வெடிக்கும் ஊசி பட்டாசு சத்தமும் குறையாத ஒன்றுதான். மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பார்கள். அதுபோல்தான் கடின உழைப்பால் கிடைத்த வெற்றியின் கிரீடம் எப்போதும் அழகுதானே. சிறிது, சிறிதாக கற்றுக் கொண்டு மலைக்க வைக்கும் அளவில் சாதனையாக மாற்றி உள்ளனர் மாணவிகள் சாதனா (11), அபிநயா (11). இருவரும் ஆறாம் வகுப்பு மாணவிகள். 10ல் ஆரம்பித்து 100, 200, 500, 1000 என்று வளர்ந்து முழுமையாக  இப்போது 1330 திருக்குறள்களையும் அட்டகாசமாக கூறி வெற்றிக் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் தங்கள் வசமாக்கி கொண்டுள்ளனர்.

திருக்குறளில் எந்த அதிகாரத்தையும் சொல்லலாம். திருக்குறளின் முதல் வார்த்தையை கூறலாம் எப்படி பந்து வீசினாலும் வெளுத்தெடுப்பது போல் உலக பொதுமறையாம் திருக்குறளை தன் நினைவுப்பக்கத்தில் பதித்தெடுத்து தடுமாறாமல், தயங்காமல் படபடவென்று சரவெடியாய் கூறி அசத்துகின்றனர்.

இதில் அபிநயா தந்தை சுந்தரமூர்த்தி கூலித் தொழிலாளி, அம்மா தாமரைச்செல்வி, தம்பி தினேஷ். 1ம் வகுப்பு படிக்கிறார். தன் நினைவாற்றலால் கடந்த 9 மாதங்கள் கடின பயிற்சி பெற்று 1330 திருக்குறளையும் 1 மணிநேரம் 15 நிமிடங்களில் ஒப்புவிக்கிறார். இதற்காக விருதும், சான்றிதழ்களும் பெற்றுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறையில் பதிவும் செய்துள்ளார் மாணவி அபிநயா. இடைவிடாத பயிற்சி, தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியைகள், பெற்றோர் கொடுத்த ஒத்துழைப்பால் சாதனை சிகரமாக உயர்ந்து நிற்கிறார் மாணவி அபிநயா.

திருக்குறளை ஒப்புவிக்க கூறினால் ஆயிரம் வாலா பட்டாசாக பட், பட்டென்று, கடகடவென்று ஒப்புவிக்கும் மாணவியின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.

மற்றொரு மாணவி சாதனாவின் தந்தை அந்தோணிராஜ் சிலிண்டர் கம்பெனி தொழிலாளி, அம்மா ரூபி. சகோதரிகள் சிந்தனா, சுதர்சனா முறையே 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கின்றனர். சாதனாவும் 1330 திருக்குறளையும் 1.30 மணி நேரத்தில் ஒப்புவித்து அசரடிக்கிறார். இவரும் வெற்றிக் கோப்பைகள், விருதுகள், சான்றிதழ்களை குவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் வேளாண் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கோபிசிங் என்ற தன்னார்வலர் திருக்குறளை சரியான முறையில் ஒப்புவிக்கும் வகையில் பயிற்சிகளை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அளித்து வருகிறார். இதனால் இரு மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்தில் திருக்குறளை தவறின்றி ஒப்புவித்து காண்பிக்கின்றனர்.

மாணவிகளின் இந்த திறமை குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி கூறுகையில், அபிநயா, சாதனா இருவரும் 1330 குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறமை கொண்டவர்கள். சிறிது சிறிதாக கற்றுக் கொண்டு இன்று முழுமையாக ஒப்புவிக்கின்றனர். இந்த இரு மாணவிகளின் அபார நினைவாற்றல் அவர்களை மேலும் மெருகேற்றும். இப்பள்ளியில் 100, 200, 300 என்று திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவ, மாணவிகள் பலர் உள்ளனர். அவர்களும் முழுமையாக 1330 குறளையும் ஒப்புவிக்கும் நாள் விரைவில் வரும். ஏழ்மை நிலை என்று எண்ணாமல் திறமையை படிக்கட்டுக்களாக கொண்டு முன்னேற நினைக்கும் மாணவ, மாணவிகளுக்கு நான் உட்பட மற்ற ஆசிரிய, ஆசிரியைகளும் முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிப்போம் என்றார்.

வரும் குடியரசு தின விழாவில் இரு மாணவிகளுக்கும், சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால் பரிசுகள் பெற வேண்டும் என்பது மாணவிகளின் விருப்பம்.  இதை முதல்வரின் கவனத்துக்க மாவட்ட கலெக்டர் கொண்டு செல்ல வேண்டும் என மானோஜிப்பட்டி மக்கள் விரும்புகிறார்கள். தங்கள்  ஊர் குழந்தைகள் சென்னை விழாவில் பரிசு பெறுவதை பார்க்க ஊரே ஆவலாக இருக்கிறது என்கிறார்கள். அத்துடன்  சாதனா, அபிநயாவை  திருக்குறள் செல்விகள் என ஊரே பாராட்டுகிறது.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *