தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொகையின் மூலம் பள்ளி ஆய்வகம், நூலகம் உள்ளிட்டவைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வாங்குவது வழக்கம். கடந்த 2019-2020 கல்வியாண்டில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சில பள்ளிகளில், மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் முறைகேடு செய்திருப்பதாக திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் ஆய்வு செய்தனர். கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மூலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமையாசிரியர்களின் ஒத்துழைப்புடன் தலா ரூ. 8 லட்சத்துக்கு பொருட்கள் வாங்கியதிலும், 13 பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கியதிலும் முறைகேடு செய்திருப்பத உறுதியானது. இதன் அடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அப்போதையை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் என 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.