அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 24- ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 5 நாட்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடக்கிறது.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அதில் கலந்துகொண்டு பேசுவோர் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டியில் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்.பி. பாலகங்கா, வேளச்சேரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், தாம்பரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, தி.நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரவாயல் தொகுதியில் பெஞ்சமின், பொன்னேரி தொகுதியில் முன்னாள் எம்.பி. வேணுகோபால், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், ஆகியோர் பேசுகிறார்கள்.