தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 12ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினர். அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதம் மற்றும் கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:
அரசு தயாரிக்கும் உரையை அப்படியே படிப்பது கவர்னரின் கடமை. வரலாற்று சிறப்பு மிக்க இந்த பேரவையை கவர்னர் அவமானப்படுத்தி விட்டார். அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்றுக்கொண்ட கவர்னர் அரசியல் சாசனத்தை மீறி விட்டார்.
தடை கற்கள் உண்டு என்றால், அதை உடைக்கும் தடந்தோள்கள் உண்டு. நான் ஸ்டாலின், அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பாசிசத்தை, கண்டு, பயப்படாமல் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான காரி்யங்களை கண்டு பயப்படாமல் தொடர்ந்து முன்னேறுவோம். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் என்று துணிந்து செல்கிறேன். பெரியார், அண்ணாவின் வழியில் செயல்படுகிறேன்.
முதல்வர் பொறுப்பு ஏற்று 33 மாதம் ஆகிறது. இது முன்னேற்றமான சாதனை மாதங்கள்.வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்றார்கள். இப்போது தெற்கு வளர்வதுடன் வடக்குக்கும் சேர்த்து வாரி வழங்குகிறது தமிழ்நாடு. நாட்டின் ஜிடிபியல் தமிழ்நாடு 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் 9% தமிழ்நாடு வழங்குகிறது.
தமி்ழ்நாட்டின் திட்டங்கள் பிற மாநிலங்களில் செயல்படுத்தப்படுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நாட்டின் வளர்ச்சி 7.24% என்கிறபோது தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19% ஆகும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். திராவிட மாடல் கொள்கைகளில் பயணிப்பதால் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. நகைக்கடன் தள்ளுபடி மூலம் 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தில் 4.81 லட்சம் மாணவிகள் பயனடைகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் சுமார் 1 கோடியே 15 லட்சம் பேர் பயனடைந்து வருகிறார்கள். மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 45 லட்சம் பேருக்கு தமி்ழக அரசு நிவாரணம் வழங்கியது. திமுக அரசின் செயல்பாட்டை இந்திய பத்திரிகைகள் மட்டுமல்ல, வெளி்நாட்டு பத்திரிகைகளும் பாராட்டி உள்ளன. காலை உணவு திட்டத்திற்காக காமராசர் வழியில் ஸ்டாலின் என தினத்தந்தி பாராட்டி உள்ளது.
வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை அதிமுக அரசை விட, திமுக அரசு சிறப்பாக செயல்பட்டது என்று இந்து பாராட்டி உள்ளது. மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி்யில் தான் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. ஆனால் மாநில அரசு தான் நிதி ஒதுக்கி உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எங்களோடு இணைந்து மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை பற்றி இங்கு விமர்சிக்க விரும்பவில்லை. மதுரை எய்ம்ஸ் சோக கதையை சொல்ல வார்த்தைகள் இல்லை.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு திட்டங்கள் தருவதில்லை. முஸ்லிம்களாக மாறிய பிற்பட்டோருக்கு , பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள் வழங்க வேண்டும் என உறுப்பினர் ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டார். அது குறித்து பரிசீலிக்கப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் மூலம் கருவறையிலும் சமூக நீதி நிலைபாட்டப்பட்டுள்ளது.
கி்ராமப்புற விளிம்பு நிலை மக்கள் கோரிக்கையை ஏற்று கிராமப்புறங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் 2 ஆயிரம் கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
வாழ்க தமிழ், வெல்க தமிழ்நாடு, நன்றி
இவ்வாறு அவர் பேசினார்.